Friday, June 11, 2010

உடையாளூர்---.ராஜராஜ சோழன் சமாதி!

ராஜராஜ சோழரின் மெய்கீர்த்தி
ஸ்ரீ ராஜராஜ சோழரின் மெய்கீர்த்தி,
"ஸ்வஸ்திஸ்ரீ திருமகள் போல
பெருநிலச் செல்வியுந் தனக்கேயுரிமை
பூண்டமை மனக்கொளக்
காந்தளூர்ச் சாலைக் கலமறுத்தருளி
வேங்கை நாடும் கங்கைபாடியும்
நுளம்பபாடியும் தடிகை பாடியும்
குடமலை நாடும் கொல்லமும்
கலிங்கமும் எண்டிசை புகழ்தர
ஈழ மண்டலமும் இரட்டபாடி
ஏழரை இலக்கமும் திண்டிறல் வென்றி
தண்டால் கொண்டதன் பொழில்
வளர் ஊழியுள் எல்லா யாண்டிலும்
தொழுதகை விளங்கும் யாண்டே
செழிஞரை தேசுகொள் ஸ்ரீகோவிராஜராஜகேசரி பந்மரான
ஸ்ரீராஜராஜ தேவர்க்கு யாண்டு"

சோழ மாமன்னர்களில் மங்காத கீர்த்தி கொண்டவன் ராஜராஜ சோழன். சிறந்த சிவபக்தனான இவன், சோழ நாடு முழுவதையும் அளந்து கணக்கிட்டு, தற்போதைய நில அளவை முறைக்கு முன்னோடியாக இருந்தவன். தமிழ் வேதமாகிய தேவாரத்தை, தில்லைவாழ் அந்தணரி டமிருந்து மீட்டு உலகுக்கு அளித்தவன். இத்தனைக்கும் மேலாய் இன்றளவும் முற்கால தமிழக கட்டடக் கலைக்கு சான்றாக நிற்கும் தஞ்சைப் பெரிய கோயிலை கட்டியவன்.



இத்தனை பேரும் புகழும் கொண்ட மன்னனின் எல்லா செயல்களுக்கும் கல்வெட்டுகளும், செப்பேடுகளும் சான்றாக இருக்கின்றன. ஆனால், அவர் இறந்த 1014&ம் ஆண்டு அவரது உடல் புதைக்கப்பட்டதா, எரிக்கப் பட்டதா, அது எங்கே நடந்தது என்பது போன்ற கேள்விகள் காலத்தின் இருண்ட பக்கங்களில் காணக் கிடைக்காமலே இருந்தன. இப்போது இந்த விஷயத்தில் சிறு வெளிச்சம் விழுந்திருக்கிறது.


கும்பகோணம் பட்டீஸ்வரம் பக்கம் இருக்கிற உடையாளூர் என்ற ஊரில்தான் ராஜராஜ சோழன் அடக்கம் செய்யப்பட்ட இடம் இருக்கிறது’ என்றொரு தகவலைத் தன் ஆராய்ச்சியின் மூலம் வெளியுலகுக்கு அறிவித்திருக்கிறார், கும்பகோணத்தைச் சேர்ந்த கல்வெட்டு ஆய்வாளர் சேதுராமன். இவரது இந்த அறிவிப்பு, மற்றவர்களாலும் நிபந்தனையுடன் ஏற்றுக் கொள்ளப்பட்டிருக்கிறது.
இதையடுத்து, தமிழக அரசு அறநிலையத்துறையின் திருக்கோயில்கள் சீரமைப்பு ஆலோசனைக் குழுவின் உயர்மட்ட உறுப்பினரான போரூர் சாந்தலிங்க அடிகளார், ‘‘ராஜராஜ சோழனின் சமாதி இருக்கும் இடத்தில் மணிமண்டபம் கட்டுவதற்கும், சோழனின் பெருமைகளைப் பறைசாற்றும் வண்ணம் இங்கு அமைந்திருக்கும் வரலாற்று நினைவிடங்களை ஒருங்கிணைத்து சுற்றுலாத் தலமாக அறிவிக்கவும் அரசிடம் பரிந்துரை செய்வோம்’’ என்று அறிவித்திருக்கிறார்.

கும்பகோணத்தில் இருந்து ஆறாவது கிலோமீட்டரில் இருக்கும் உடையாளூர் கிராமத்துக்குச் சென்றோம். பச்சைப் பசேலென்று கண்களுக்குள் குளிர்ச்சியை அள்ளித் தெளிக்கிறது அந்தக் கிராமம். சின்ன சந்தில் உள்ள குடிசை வீட்டுக்கு போய் ‘ராஜராஜன் சமாதி’ என்று கேட்டால் குடிசையில் இருக்கும் பெரியவர் பக்கிரிசாமி அந்த வீட்டுக்குப் பின்னால் இருக்கும் வாழைத் தோப்புக்குள் அழைத்துச் செல்கிறார். அங்கே ஓரிடத்தில் ஒரு பெரிய சிவலிங்கம் தெரிகிறது. அதற்கு எதிரே விளக்கேற்ற ஒரு மாடம் தெரிகிறது. அதைக் காட்டி இதுதான் என்கிறார் பெரியவர்.


கிராமத்தில் இருக்கும் வயோதிக சிவாச்சாரியாரான வைத்தியநாதர் என்பவர், ‘‘கல்வெட்டு ஆராய்ச்சியாளர் சேதுராமன் மைசூரில் வைக்கப்பட்டிருக்கும் கல்வெட்டு படிகளைப் பார்த்தபோது, இங்குள்ள பெருமாள் கோயிலில் முதலாம் குலோத்துங்க சோழனின் கல்வெட்டு ஒன்று இருப்பதையும் அதில் ராஜராஜ சோழன் எழுந்தருளி இருக்கும் நினைவு மண்டபம் சிதிலமடைந்து இருந்ததாகவும் அதை சரிசெய்ததாகவும் பொறிக்கப்பட்டு இருப்பதைப் பார்த்திருக்கிறார். உடனே இங்கு வந்து பெருமாள் கோயிலை ஆய்வு செய்தார். அப்போதுதான் ராஜராஜன் நினைவுமண்டபத் தூண் இருக்கும் விஷயமே வெளியில் தெரிந்தது. அதற்குப் பிறகு குடவாசல் பாலசுப்ரணியமும் அவரும் அந்தத் தூணை தேடும்போதுதான், கிடைக்காமல் என்னிடம் வந்து கேட்டார்கள். பால்குளத்து அம்மன் கோயிலைப் புதுப்பிக்கும்போது, ஒரு தூண் தேவைப்பட்டதால் பெருமாள் கோயிலில் இருந்த அந்தத் தூணை அங்கே எடுத்துப்போய் வைத்து விட்டோம் என்றேன். உடனே அங்கு சென்று பார்த்தபோது அது ராஜராஜன் நினைவு மண்டபத் தூண் என்பதற்கான எழுத்துக்கள் பொறிக்கப்பட்டிருந்தது. இதைத் தொல்பொருள் துறையினரும் படியெடுத்து ஆவணமாகப் பதிவு செய்திருக்கிறார்கள். அதற்குப் பிறகுதான் எல்லோரும் ராஜராஜன் நினைவிடம் இங்குதான் இருக்கிறது என்பதை ஒப்புக் கொண்டார்கள்’’ என்றார்.

ராஜராஜன் நினைவிடத்தில் குடிசைகட்டி வாழ்ந்து வரும் பக்கிரிசாமி ‘‘கோயில் இடமான இதில் எங்க அப்பா காலத்திலிருந்து குடியிருக்கிறோம். இரண்டு வருஷத்துக்கு முந்தி ஒருநாள் மழை பெஞ்சப்போ, இந்த இடத்துல திடீர்னு மண் உள் வாங்கிடுச்சு. அப்போ கொஞ்ச ஆழத்துக்கு மண்ணைத் தோண்டிப் பார்த்தேன். உள்ளே எண்கோண வடிவில் கட்டடம் போன்ற அமைப்பு இருந்தது. என்ன, ஏதுனு புரியாததால அதை அப்படியே மூடிட்டேன். இப்பதான் இது ராஜா சமாதின்னு தெரிஞ்சுகிட்டேன். அதற்கப்புறம் தினமும் கொஞ்சம் எண்ணெய் ஊத்தி விளக்குக் கொளுத்தி வைக்கிறேன்’’ என்றார்.

இந்த விஷயத்தில் அதிக அக்கறை காட்டி வரும் கல்வெட்டு ஆராய்ச்சியாளர் குடவாயில் பாலசுப்ரமணியனிடமும் இதுகுறித்துப் பேசினோம். ‘‘அந்த இடத்தில்தான் ராஜராஜ சோழன் சமாதி இருக்கும் என்பதை 100 சதவிகிதம் உறுதியாக சொல்லத்தகுந்த ஆதாரங்கள் இல்லைதான். ஆனால், அதுவாகத்தான் இருக்கும் என்பதற்கு 90 சதவிகித சாத்தியக்கூறுகள் இருக்கின்றன. அதைப்பற்றி பேசுவதற்குள் அதை சமாதி என்று சொல்வது தவறு. அவனது அஸ்தி வைக்கப்பட்டு, அதன்மீது எழுப்பப்பட்ட பள்ளிப்படை கோயிலாகவோ நினைவு மண்டப மாகவோகூட அது இருக்கலாம். அதனால் அதை நினைவிடம் என்று அழைக்கலாம். சோழ மன்னர்களின் குடும்பத்தினர் தஞ்சையில் அரசாண்டாலும் அவர்கள் வசிக்கும் மாளிகைகள் பழையாறையில்தான் இருந்தது. அதோடு ராஜராஜ சோழனின் மனைவியர்களில் ஒருவரான பஞ்சவன் மாதேவியினுடைய பள்ளிப்படை கோயில், பட்டீஸ்வரத்தில்தான் இருக்கிறது. அதனாலும் அந்த நினைவு மண்டபத் தூணாலும் அந்த இடம் ராஜராஜ சோழனின் நினைவிடம்தான் என்று உறுதியாக சொல்லலாம். கங்கைகொண்ட சோழபுரத்தையும், தஞ்சாவூரையும் அகழ்வாராய்ச்சி செய்ததைப் போல, இங்கும் மத்திய தொல்பொருள் துறை முழுவீச்சில் அகழாய்வு செய்தால், இன்னும் பல சரித்திர சான்றுகள் கிடைக்கும்’’ என்றார்.

சென்னையில் இருக்கும் தமிழ்நாடு அரசு தொல்பொருள் துறை அலுவலகத்தில் இதுகுறித்து விசாரித்தோம். ‘‘உடையாளூர் கோயில் கல்வெட்டில் ‘மகேஸ்வரதானம்’ என்பது பற்றி குறிப்பிடப்பட்டிருக்கிறது. அது இறந்தவர்களுக்காகக் கொடுக்கப்படுவது. அதோடு ராஜராஜேஸ்வரம் என்ற கோயில் இருந்ததாகவும் குறிப்பிடப்பட்டிருக்கிறது. அது ராஜராஜனுடைய அஸ்தி மேல் எழுப்பப்பட்ட கோயிலாக இருக்கலாம். அதோடு பால்குளத்து அம்மன் கோயிலில் இருக்கும் கல்வெட்டுத் தூணையும் பார்க்கிறபோது, அந்த இடம் ராஜராஜன் நினைவிடமாக இருப்பதற்கான வாய்ப்புகள் அதிகமாக இருக்கிறது. ஆனால், அந்த இடத்தை அகழ்வாராய்ச்சி செய்வது சம்பந்தமாக தங்களிடம் திட்டம் ஏதும் இல்லை’’ என்றனர்.
thanks கரு.முத்து


1 comment:

  1. The Sports Betting Hub at Casino.us® - JamBase
    Join the hottest new slot players at The 경상북도 출장안마 Sports Betting Hub at 익산 출장마사지 Casino.us®. With a variety of games 강릉 출장샵 to bet 원주 출장안마 on, we can help 김포 출장샵 elevate your game at your fingertips.

    ReplyDelete